Sunday, 22 October 2017

"செங்காந்தள் மலர்" "கண்வலிக்கிழங்கு"

"செங்காந்தள் மலர்"  "கண்வலிக்கிழங்கு"

தமிழ்நாட்டின் மாநில மலராகப் போற்றப்படுவது செங்காந்தள் மலர். செங்காந்தள் ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழீழத்தின் மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

`Gloriosa Superba’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் `கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

செங்காந்தள் என்பது காந்தள் அல்லது கார்த்திகைப் பூ என்பதுபோன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் பூக்கும் இந்தப்பூ வேலிகளில் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும் இந்த மலர் அழகிய விரல்களைப் போலவும், சுடர்கள்போலவும் காட்சியளிக்கும்.

செடி வகையான இது, கொடிபோல் படரக்கூடியது. இலைகளின் நுனி நீண்டும் சுருண்டும் பற்றுக்கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றைப் பற்றிப் பிடித்து வளரக்கூடியது.

இதன் இலைகளுக்கு காம்பு கிடையாது.  இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடன் பூக்கும் இந்த மலர் பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு (Scarlet), நீலம் கலந்த சிவப்பு என நிறம் மாறிக்கொண்டே போகும்.

தீ கொழுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும் செங்காந்தள் பூவை `அக்னிசலம்’ என்று சொல்வார்கள்.

காந்தள் மலர்ச் செடியின் வேர்ப்பகுதியை `கண்வலிக்கிழங்கு’, `கலப்பைக்கிழங்கு’, `வெண்தோன்றிக்கிழங்கு’, `கார்த்திகைக்கிழங்கு’ என்று அழைக்கிறார்கள். கிழங்கின் ஒவ்வொரு பகுதியின் முனையிலும் புதிய கணு முளைக்கும்.

கிழங்கு கலப்பையைப்போன்ற தோற்றத்துடன் காணப்படுவதால், அதை `கலப்பை’ என்றும், `இலாங்கிலி’ என்றும் சொல்வார்கள்.

இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால், `தலைச்சுருளி’ என்பார்கள். மற்ற தாவரங்களைப் பற்றிக்கொண்டு வளர்வதால் `பற்றி’ என்றும் சொல்வார்கள்.

வளைந்து பற்றிக்கொள்வதால், `கோடல்’, `கோடை’ என்று அழைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் பூ பூப்பதால் `கார்த்திகைப்பூ’ எனப்படுகிறது.

மழைக்காலத்தில் வனப்புடன் காணப்படுவதால், `தோன்றி’ என்றும் நாட்டு மருத்துவத்தில் `வெண்தோண்டி’ என்று அழைப்பார்கள்.

பூக்களின் நிறம் வேறுபடுவதால், `வெண்காந்தள்’ என்றும், `செங்காந்தள்’ என்றும் வர்ணிக்கிறார்கள்.

கிழங்கு பிரிந்து கணுக்கள் காணப்படுவதை, `ஆண்காந்தள்’ என்றும் கணுக்கள் இல்லாததை `பெண்காந்தள்’ என்றும் சொல்வார்கள்.

செங்காந்தள் மலரில் தேன் அதிகமாகக் காணப்படுவதால், எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் வட்டமிட்டுக்கொண்டிருக்குமாம். பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை. ஆனால், செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்.

செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, புற்றுநோய் பரவாமல் தடுக்கும் கால்சிசின் (colchicine) செங்காந்தளின் விதை, கிழங்கில் அதிகமாக உள்ளது. இதற்காக செங்காந்தள் செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றன.

செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.

செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும். மேலும், இந்தத் தைலத்தை மேகநோய், சொறி, சிரங்கு, படை உள்ளவர்கள் குளித்து வந்தால் நோய் குணமாகும். இத்தகைய சூழலில் புளி, புகைப்பிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது.

வாதநோய், மூட்டுவலி, தொழுநோயைக் குணப்படுத்துவதுடன் பால்வினை நோய், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. பிரசவவலியைத் தூண்டும் நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.

பச்சைச் செங்காந்தள் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அது மூழ்குமளவு வேப்பெண்ணெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். கிழங்குகள் மேலே மிதக்கும்போது அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து, பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவற்றுக்கு இந்த எண்ணெயைத் தேய்த்துவந்தால், குணம் கிடைக்கும். மேலும் தலைப்பேன்களை ஒழிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முக்கிய குறிப்பு  : இதை நேரடியாகச் சாப்பிட்டா விஷம்.

No comments:

Post a Comment